கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெண்கள் பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட்பட பல வேலைகளை செய்கிறார்கள். ஆனால் அதன் பின் கைகளுக்கு சன்ஸ்கிரீன் போன்றவற்றை உபயோகிக்க தவறி விடுகிறோம்.
இதன் விளைவாக, கைகளில் வறட்சி, அரிப்பு, வெடிப்பு, ஏற்படுகின்றன. முகத்தில் காணப்படும் தோலைப் போலவே, கைகளின் பின்புறம் காணப்படும் தோலும் மிகவும் மென்மையானது. எனவே, முகத்தைப் போலவே, கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும்.
குறிப்பாக, கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய, மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. சில எளிய வழிமுறைகளை பின்பற்றிவந்தால் உங்கள் கைகள் பார்க்க அழகாகவும், மென்மையாகவும் மாறுவதை காணலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.....
வாரம் ஒரு முறை வெது வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு, 20 நிமிடங்கள் வைத்திருந்த பின்னர் கைகளை நன்றாக துடைத்துவிட்டு, கைகளுக்கான கிரீம் தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்டமளிக்கும்.
கைகளின் தோல் வறட்சி உடையவர்கள் கைகளை கழுவிய பின், ஹேண்ட் கிரீமை அடர்த்தியாக, தடவ வேண்டும். பின், அதன் மேல் மெல்லிய துணியை போர்த்தி, சூடான பாரபின் மெழுகை ஊற்ற வேண்டும். பாரபின் மெழுகின் சூட்டால், ரத்த ஓட்டம் அதிகரித்து, தோலில் காணப்படும் துளைகள் விரிந்து ஹேண்ட் கிரீம் சிறப்பாக உறிஞ்சப்படும்.
குளிர் காலங்களில் கைகளுக்கு கம்பளி உறைகள் அணிந்து, கைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வயதாவதால், தோலில் சுருக்கம் மற்றும் கோடுகள் போன்றவை ஏற்படும்.
சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நேரடியாக தோலில்படுவதால், விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படுகிறது. இவற்றில் இருந்து சன்ஸ்கிரீன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே, தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால், இவை, தடுக்கப்படும்.