தலைமுறையினரை கவரும் ஹேர் டை

 நரையை மறைக்க ஹேர் டை என்ற காலம் போய், அழகை மேம்படுத்த ஹேர் டை என்ற காலம் வந்துவிட்டது. இப்போது நம் நாட்டிலும் இளம் தலைமுறையினரிடம் தலைமுடியை டை செய்து கொள்வது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. ஹேர் டை பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டு செயல்பட்டால் அது உங்கள் தோற்றத்தில் நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.


நீங்கள் முதல் முறையாக முடியை டை செய்யுமுன் ஒரு அழகு நிலையம் (ப்யூட்டி பார்லர்) சென்று அழகுக் கலை நிபுணரின் ஆலோசனையைப் பெறவும். உங்கள் நிறத்திற்கேற்ற, உங்கள் முடியின் அமைப்புக்குத் தகுந்த நிறம் என்ன என்பது ஒரு அழகுக் கலை நிபுணரால்தான் கூற முடியும்.

அழகு நிலையம் செல்லாமல் நீங்களே முடிவெடுக்க விரும்பினால், உங்கள் முடியின் ஒரு சிறிய பாகத்தை டை செய்து பார்க்கவும். ஹேர் டையின் நிறம் முடிவாகிவிட்டது. வீடோ அல்லது அழகு நிலையமோ, முதலில் ‘அலர்ஜி டெஸ்ட்’ செய்து, நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஹேர் டை உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உங்கள் முடியை முழுவதாக டை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. தலையின் முன் பக்கத்திலோ பின் பக்கத்திலோ மேலே இருக்கும் சில முடிகளை மட்டும் “ஹை லைட்” செய்யலாம். இதை பராமரிப்பதும் எளிது. டை செய்த முடிக்கு அதிக பராமரிப்பு தேவை என்பதை மறந்து விடாதீர்கள். அதற்கேற்ற ஷாம்பூ, கண்டிஷனர் ஆகியவற்றை உபயோகப்படுத்துங்கள்.

உங்கள் முடியை மருதாணியால் டை செய்திருந்தால், அந்த நிறம் முழுமையாக மாறும் வரை கெமிக்கல் ஹேர் டை உபயோகிப்பதை தவிர்க்கவும். குளித்த பிறகு ஹேர் ட்ரையர் அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். முடி அதிகமாக சூடானால் உங்கள் டையின் நிறம் மாறி, ஆங்காங்கே வெளுத்து அசிங்கமாகத் தோற்றமளிக்கும்.

நாட்கள் செல்லச் செல்ல உங்கள் முடி வளருவதால், டை செய்த முடியில் புதிதாக வளர்ந்த முடி வித்தியாசமாகத் தோற்றமளிக்கும். அதனால் இரு வாரத்துக்கு ஒரு முறை வளர்ந்த முடியை ‘டச் அப்’ செய்து கொண்டால் அழகாக இருக்கும்.