கோடைக்கு ஏற்ற ஆடை...

  மனித வாழ்க்கையில் கடந்து வரும் பல்வேறு பருவங்கள் எப்படி தவிர்க்க முடியாததோ அதுபோல் இயற்கையில் மாறிவரும் பருவ காலங்களும் தவிர்க்க முடியாதது. மனித பருவங்களை கொண்டாடுவதுபோல், இயற்கையின் பருவங்களையும் கொண்டாட வேண்டும்.


அந்த வகையில் இப்போது நாம் கொண்டாடுவதற்காக வந்திருக்கிறது, மீண்டும் ஒரு கோடை! “கோடை என்றாலே சுட்டெரிக்கும் வெயிலும், வழியும் வியர்வைதான் நினைவுக்கு வரும். அதனால் சவுகரியமாக இருக்கமுடியாது. விதவிதமாக ஆடைகள் அணியமுடியாது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்.

உண்மை அதுவல்ல. கோடை காலத்திலும் அழகழகாக ஜொலிக்கும் உடைகளை அணிந்து ஆனந்தமாக வாழலாம். “கோடை என்றாலே காட்டன் ஆடைகளைத்தான் அணியவேண்டும் என்ற நிலையில் இருந்து மக்கள் மாறிவிட்டார்கள். ‘இந்த சம்மருக்கு புதிதாய் என்ன வந்திருக்கிறது’ என்று புதுப்புது பேஷன் உடைகளை தேடத் தொடங்கியிருக்கிறார்கள்.

அவர்களது ஆசையை புரிந்துகொண்ட டிசைனர்கள் விதவிதமாக கோடைக்கால ஆடைகளை வடிவமைத்து நகரத்திற்கு நகரம், பேஷன் ஷோ நடத்தி வெளியிட்டுக்கொண்றார்கள். இந்த கோடையில் பெண்கள் விரும்பும் சில வகை பேஷன் உடைகள் இதோ...

மோனோ குரோமேட்டிக் ஆடை:.............பொதுவாக கோடை காலத்திற்கு ஏற்றது, வெள்ளை நிறம் என்பார்கள். அது சூரிய வெப்பத்தை வெளித்தள்ளும். கறுப்பு நிறம் வெப்பத்தை உள்வாங்கும். அதனால் அது கோடைக்கு பொருத்தமற்றது என் பார்கள். இந்த மோனோ குரோமேட்டிக் ஆடைகள் கறுப்பும், வெள்ளையும் கலந்த கலவை.

பொதுவாக கட்டம்போட்ட ‘செக்’ ஆடைகளுக்கு சம்மரில் அதிக மவுசு ஏற்படும். அதை ஈடுசெய்யும் விதத்தில் இந்த கோடைக்கு பிளாக் அண்ட் ஒயிட் செக் உடைகள் பேஷனாகி இருக்கிறது. பெண்கள் அதிக அளவில் இதை விரும்புகிறார்கள்.

ஸ்டிரைப்ஸ்: இந்த வார்த்தைக்கு பல்வேறு நிறத்திலான கோடுகள், நீண்டு குறுகிய கோடுகள் என்று அர்த்தம். இந்த ஆடைகளும் கோடுகளால் நிரம்பியது. நம் நாட்டில் இப்போது பெண்கள் உடல் பருத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வகை நேர் கோடு உடைகள் அவர்களை ஓரளவு கச்சிதமாக காட்டுவதால், ‘ஸ்டிரைப்ஸ்’க்கு மவுசு அதிகரித்திருக்கிறது.

குள்ளமாக இருப்பவர்களும் ‘நேர் கோடு’ ஆடைகளை கோடைக்கு தேர்வு செய்கிறார்கள். ஒல்லியாக இருப்பவர்கள் குறுக்கு கோடு கொண்ட ஆடைகளையும், கச்சிதமான உடல் வாகுவைக்கொண்ட பெண்கள் ஏற்ற- இறக்கமான கோடுகளைக் கொண்ட ஆடைகளையும் கோடைக்கு தேர்வு செய்கிறார்கள்.

கலர் பிரேக்: ‘இந்த கலருக்கு இந்த கலர்தான் பொருத்தமாக இருக்கும்’ என்ற பொதுவாக கருத்து நிலவிக்கொண்டிருக்கிறது. அப்படியல்ல, அதற்கு நேர் எதிரான கலரைக்கூட அணிந்து ஜமாய்க்கலாம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது, இந்த ‘கலர் பிரேக்’ பேஷன்.

இதில் இருக்கும் சிறப்பு என்னவென்றால், கட்டமைப்பான உடல்வாகு இல்லாதவர்களையும், அந்த குறைபாடு தெரியாத அளவிற்கு இந்த வகை ஆடைகள் நேர்த்தியாகக்காட்டும். ஆப்பிள் வகை உடல்வாகு கொண்ட பெண்களின் உடலின் மேல் பகுதி குண்டாகவும், கீழ்ப்பகுதி ஒல்லியாகவும் இருக்கும்.

அவர்கள் தங்களுக்கான கோடைகால உடைகளைத் தேர்ந்தெடுக்கும்போது மேல் பகுதி ஆடை அடர்த்தியான நிறத்திலும், கீழ்ப்பகுதி ஆடை இளநிறத்தில் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.